புதுடெல்லி,மே.27- நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒருபகுதியாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேரும் குழந்தையின் தாய்மொழி வழியாகவே 2-ம் வகுப்பு வரை கல்வி புகட்ட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் அந்த மாநில மொழி பயிற்று மொழியாக இருக்கலாம் என்றும், 2 முதல் 5-ம் வகுப்பு வரை அதே பயிற்று மொழியை விரும்பினால் தொடரலாம் அல்லது வேறு மொழியை தேர்ந்தெடுக்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின்கீழ் 30,858 பள்ளிகள் இயங்குகின்றன. அதில் 2.82 கோடி மாணவர்கள் பயின்றுவரும் நிலையில் புரட்சிகரமான முடிவை மத்திய கல்விவாரியம் எடுத்து அமல்படுத்துவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. தாய்மொழி கல்விக்கு தேவையான 2-ம் வகுப்பு வரையிலான என்சிஇஆர்டி புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், 5-ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.