Home Front Page News ஜெர்மனியில் தமிழக தினம்

ஜெர்மனியில் தமிழக தினம்

புதுடெல்லி: டிச. 9: ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் முதல் முறையாக தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
ஜெர்மனியில் உள்ள தமிழர்கள் திரளாகக் கலந்து கொண்ட விழாவை பிராங்க்பர்ட்டில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், ஐரோப்பியத் தமிழர்கள் கூட்டமைப்பு. ஜெர்மனி தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தின. முக்கிய விருந்தினராக தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்ரபாணி, வணிக முதலீடு மற்றும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்ரபாணி பேசுகையில், “எங்கள் முதல்வர் பதவி ஏற்றபோது இந்திய தொழில்துறையில் தமிழ்நாடு 14-வது இடத்தில் இருந்தது. அது தற்போது 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. ஜெர்மனி வாழ் தமிழர்கள் தாய் நாடான இந்தியா, தமிழ்நாட்டை மறந்து விடாமல் ஏதாவது ஒரு வகையில் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், “பல தொழில் துறைகளில் இந்தியாவின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே, தமிழகத்தின் பெருமையை இங்குள்ள தமிழர்கள் அன்றாடம் ஒரு மணி நேரமாவது வெளிநாட்டவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
பிராங்பர்ட்டில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரியும் தமிழருமான பி.எஸ்.முபாரக் பேசுகையில், “பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5 டிரில்லியன் டாலரை நோக்கியும், தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலரை நோக்கியும் வளர முயற்சிக்கின்றன. ஜெர்மனியில் பல தமிழர்கள் உயர் பதவிகளிலும், புதிய கண்டுபிடிப்பாளர்களாவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து இந்தியா ஜெர்மனி பல துறைகளில் வளர உதவலாம். இந்த தமிழ்நாடு தின நிகழ்ச்சியும் அதற்கு பயன் தரும்” என்றார்.

Exit mobile version