புதுடெல்லி, மே 27- நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. நாட்டில் கரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கரோனா பாதிப்பு விவரத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. இதன்படி நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,009 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 430 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவில் 209 பேருக்கும் டெல்லியில் 104 பேருக்கும் குஜராத்தில் 83 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம், பிஹார், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. கடந்த வாரம் மே 19-ம் தேதி நாட்டில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 257 ஆக இருந்தது. இந்நிலையில் ஒரு வாரத்தில் புதிதாக 752 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.