ஹைதராபாத்: ஜூலை 11-
சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உட்பட 29 நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
சட்ட விரோதமான சூதாட்ட செயலிக்கு நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், சமூக வலைதள பிரபலங்கள் விளம்பரம் செய்ததாக தெலங்கானா போலீஸார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதன்படி ராணா தக்குபாட்டி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மன்ச்சு லட்சுமி, பிரனீதா, நிதி அகர்வால், அனண்யா நாகள்ளா, சியாமளா, ஸ்ரீமுகி, வர்ஷினி சவுந்தர்ராஜன், சிரி ஹனுமந்து, வசந்தி கிருஷ்ணன், ஷோபா ஷெட்டி, அம்ருதா சவுத்ரி, நயனி பாவனி, நேஹா பட்டான், பண்டு, பத்மாவதி, இம்ரான் கான், விஷ்ணு ப்ரியா, ஹர்ஷ சாய், பையா சன்னி யாதவ், டேஸ்ட்டி தேஜா, ரீத்து சவுத்ரி, பண்டாரு சுப்ரிதா உள்ளிட்டோர் மீது சைபராபாத் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
சட்ட விரோதமான சூதாட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறு நடிகர், நடிகைகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் பன்மடங்கு ஊதியம் அல்லது கமிஷன் பெற்றதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் தெலங்கானா போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உட்பட 29 நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.