கொல்கத்தா, மே 30- பிரதமர் மோடி மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகச் சாடியுள்ள மம்தா, இதன் மூலம் நாட்டில் உள்ள எல்லா பெண்களையும் அவமதிப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தன்னுடன் நேரடியாக டிவி விவாதத்திற்கு வர முடியுமா என்றும் பிரதமர் மோடிக்குச் சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்த அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம் அரசியல் லாபம் பெற முடி முயல்வதாகவும் அதை ஒரு தேர்தல் பிரச்சார கருவியாகப் பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற தீவிரவாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதிகளை ஏன் இன்னும் பிடிக்கவில்லை? அமெரிக்கா ஏதாவது சொன்னால் நொடியில் அமைதியாகிவிடுகிறீர்களே.. (இந்தியா பாகிஸ்தான் போரை நான் சொல்லியே நிறுத்தின என டிரம்ப் கூறுவதை மம்தா குறிப்பிடுகிறார்). எங்களுக்கு எல்லாம் தெரியும். விளம்பரத்திற்காகவோ அல்லது பிம்பத்தை ஏற்படுத்தவோ மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது.