Home செய்திகள் தேசிய செய்திகள் மும்பையை முடக்கிய மழை: 100 ஆண்டுகளில் காணாத சீற்றம்

மும்பையை முடக்கிய மழை: 100 ஆண்டுகளில் காணாத சீற்றம்

மும்பை: மே.27-மஹாராஷ்டிராவில், 35 ஆண்டுகளுக்கு பின் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளது. மும்பையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காலை 8.30 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.மும்பையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், அந்த நகரமே வெள்ளக்காடானது.
பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, ரயில், விமான சேவையும் முடங்கியது. கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ல் துவங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த முறை ஒரு வாரத்துக்கு முன்பாகவே துவங்கி, வெளுத்து வாங்கி வருகிறது.
இதைத் தொடர்ந்து மஹாராஷ்டிராவிலும், 35 ஆண்டுகளுக்கு பின், பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளது. தலைநகர் மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கிய கனமழை, விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு முறிந்து விழுந்த நிலையில், மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்தன. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மும்பையில் உள்ள குர்லா, சியோன், தாதர், பரேல் ஆகிய பகுதிகள், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியது. இதனால், புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்கள் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டன.மும்பைக்கு வர வேண்டிய மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டன.மும்பையில் உள்ள வோர்லி பாதாள மெட்ரோ ரயில் நிலையம் வெள்ளத்தால் மூழ்கியது. மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. கடந்த 1918ல், மே மாதத்தில், 28 செ.மீ., மழை பதிவான நிலையில், 107 ஆண்டுகளுக்கு பின், நடப்பு மாதத்தில் இதுவரை, 29 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

Exit mobile version