நாம்பென், ஜூலை 26- தாய்லாந்து-கம்போடியா இடையேயான சண்டை, உச்சக்கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியர்களுக்கான அவசர தொலைபேசி எண்களை தூதரகம் வெளியிட்டு உள்ளது.சர்ச்சைக்குரிய கோவில் பகுதியை மையமாக கொண்டு, கம்போடியா, தாய்லாந்து நாடுகள் இடையே மோதல் மூண்டுள்ளது. சர்வதேச நாடுகளை கவலையில் ஆழ்த்தி உள்ள இந்த சண்டையால் இதுவரை 32 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து உள்ளனர். தொடர்ந்து மோதல் உக்கிரமான கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளதால், கம்போடியாவில் உள்ள 7 மாகாணங்களின் எல்லை பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு இருக்கிறது. இந் நிலையில், புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் தூதரகம், அங்குள்ள இந்தியர்களின் தேவைக்காக உதவி எண்ணையும், இ மெயில் முகவரியையும் அறிவித்துள்ளது. இதுகுறித்து தூதரகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; கம்போடியா-தாய்லாந்து நாடுகள் இடையேயான மோதல் காரணமாக, எல்லைப் பகுதிகளில் பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். ஏதேனும், அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் +855 92881676 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். மேலும் cons.phnompenh@mea.gov.in. என்ற இமெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.