அசம்கர்: டிசம்பர் 28 உத்தர பிரதேசத்தில், 49 ஆண்டுகளுக்கு முன் கண்காட்சியில் தொலைந்து போன பெண்ணை அவரது குடும்பத்துடன், அசம்கர் போலீசார் சேர்த்து வைத்தனர்.
உ.பி.,யின் மொராதாபாதைச் சேர்ந்த புல்மதி என்ற பெண், 8 வயதில் தாயுடன் கண்காட்சிக்கு சென்ற இடத்தில் காணாமல் போனார்.தற்போது 57 வயதாகும் அவர், நீண்ட காலமாக தன் குடும்பத்தினரை காண பல்வேறு முயற்சிகள் எடுத்தார். அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இது குறித்து அறிந்த ராம்பூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை பூஜா ராணி, அசம்கர் போலீஸ் எஸ்.பி., ஹேம்ராஜ் மீனாவுக்கு தகவல் அளித்தார்.
அவர், புல்மதியை அழைத்து விபரங்களை சேகரித்தார். அதன்பின், ‘ஆப்பரேஷன் புன்னகை’ என்ற பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
புல்மதி அளித்த தகவலை வைத்து, மவு மாவட்டத்தில் உள்ள அவரின் மாமா ராம்சந்தரின் வீட்டை தனிப்படையினர் கண்டறிந்தனர்.
அவர், 1975ல் புல்மதி காணாமல் போனதை உறுதிப்படுத்தினார். பின், புல்மதியின் சகோதரர் லால்தரை அசம்கர் மாவட்டத்தின் பெட்பூர் கிராமத்தில் கண்டுபிடித்தனர். அவர்களிடம் புல்மதியின் அடையாளங்களை உறுதிப்படுத்திய பின், குடும்பத்தினருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர். இந்த சந்திப்பு உணர்ச்சிகரமானதாக அமைந்தது.
இது குறித்து அசம்கர் எஸ்.பி., ஹேம்ராஜ் மீனா கூறியதாவது:
தற்போது, புல்மதி என்றழைக்கப்படும் பெண், 8 வயது சிறுமியாக இருக்கும் போது மொராதாபாதில் கண்காட்சி ஒன்றில் காணாமல் போயுள்ளார்.
அவரை, வயதான நபர் ஒருவர் கூட்டிச்சென்று ராம்பூரில் ஒரு குடும்பத்தினரிடம் விற்றுவிட்டார்.
அங்கு வளர்ந்த அவர், தற்போது போலீசாரின் முயற்சியால் 57 வயதில் குடும்பத்தினரை சந்தித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.