பாட்னா: ஜூலை 9-
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‛இந்தியா’ கூட்டணி சார்பில் பீகாரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாட்னாவில் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் தேர்தல் ஆணையத்தை கண்டித்து பேரணி சென்று வரும் நிலையில் பல இடங்களில் டயர்களுக்கு தீவைப்பது மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணியை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (Special Intensive Revision – SIR) தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடைசியாக 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சுமார் 2 கோடிக்கும் அதிகமானவர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
குறிப்பாக பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வெளிமாநிலங்களில் உள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் நீக்கப்படலாம். இது பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையலாம் என்று ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனால் இந்த திருத்தத்தை முறைப்படுத்தப்படுத்த வேண்டும். கூடுதல் காலஅவகாசத்துடன் இந்த பணியை முறைப்படி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். அதோடு இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதை எதிர்த்து ‛இந்தியா’ கூட்டணி சார்பில் இன்று பீகாரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எதிர்கட்சி கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விஐபி எனும் விக்சில் இன்சான் கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு பீகாரில் ‛மகாகத் பந்தன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட பீகார் பந்த் இன்று தொடங்கி நடந்து வருகிறது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். வாகனத்தில் மேல் அவர்கள் நின்று ஊர்வலம் சென்று வருகின்றனர். இந்த கண்டன பேரணி பாட்னாவின் கோலம்பூர் பகுதியில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் இருந்து தொடங்கி மாநில தேர்தல் அதிகாரியின் அலுவலகம் வரை நடைபெற உள்ளது. அதேபோல் பீகாரில் பல இடங்களில் ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோன்பூர், ஹஜ்பூர் உள்ளிட்ட இடங்களில் கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலைகளில் டயர்களுக்கு தீவைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெஹனாபாத்தில் ஆர்ஜேடி மாணவர் பிரிவினர் ரயில்களை மறித்தனர். இதனால் பீகாரில் இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.