ஸ்ரீநகர், ஜூலை 17-
இந்திய ராணுவம் லடாக்கில் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் சீனா, இந்த சோதனையை கவலைக்குரியதாக பார்க்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த சோதனை, ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்’ (DRDO) மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, ராணுவ வான் பாதுகாப்பு மூலம் 15,000 அடிக்கு மேல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு DRDOவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் விமான பாதுகாப்பு திறன்களுக்கு ஒரு முக்கிய ஊக்கமாக, இந்திய ராணுவம் நேற்று உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் தரை-வான் ஏவுகணை அமைப்பின் உயர்-உயர சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஏவுகணைகள் அரிதான வளிமண்டலத்தில் வேகமாக நகரும் வான் இலக்குகளை இருமுறை நேரடியாக தாக்கி, தீவிர நிலைமைகளில் அமைப்பின் செயல்திறனை நிரூபித்தன. ஆகாஷ் பிரைம் ராணுவத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது ஆகாஷ் ரெஜிமென்ட்களின் ஒரு பகுதியாக சேர்க்கப்படும். இந்த அமைப்பு ஏற்கனவே ஆபரேஷன் சிந்துரின்போது தனது செயல்பாட்டு வெற்றியை நிரூபித்தது, அங்கு சீன ஜெட் விமானம் மற்றும் துருக்கி டிரோன்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உதவியது” என்று கூறியுள்ளனர்.
லடாக்கில் இந்தியாவுக்கு கூடுதல் ராணுவ பலம் தேவைப்படுகிறது. சர்வதேச சூழலில் தற்போது சீனாவும், பாகிஸ்தானும், வங்கதேசமும் ஓரணியில் திரள தொடங்கியுள்ளன. இப்படி இருக்கையில், நம்முடைய ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த சூழலில்தான் இந்திய ராணுவம் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அம்சத்தை பரிசோதித்திருக்கிறது. அதுவும் 15,000 உயரத்தில் இதை பரிசோதித்தன் மூலம், அனைத்து காலநிலைக்கும் இது ஏற்றதாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமான பகுதிகளில் வான் பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுவதற்கு சிறப்பான தொழில்நுட்பங்கள் அவசியமில்லை.