புதுடெல்லி: ஜூலை 21- நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றம் தொடங்கும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு உலக நாடுகளின் ஆர்வம் இந்திய ஆயுதங்கள் மீது திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக விண்வெளித் துறையில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும் மசோதா கொண்டு வரப்பட உள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் பீகார் தேர்தலின் சிறப்புத் திருத்த நடவடிக்கை மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கேள்விகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் மோதலைத் தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அது குறித்தும் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு இந்தக் கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் விளக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். பிரமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பருவகாலம் என்பது புதிய கண்டுபிடிப்புகளின் அடையாளமாக விளங்குகிறது. நாட்டில் இந்தாண்டு பருவமழை சீராகப் பெய்து வருகிறது. இதனால் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம், கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரத்திற்கும் மழை மிகவும் முக்கியமானது.
நாடாளுமன்றத்தின் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் ஒரு வெற்றி விழாவைப் போன்றது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும் தருணம். அனைத்து எம்.பி.க்களும், நாட்டு மக்களும் ஒருமித்த குரலில் இந்தச் சாதனையைப் போற்றுவார்கள். இது நமது எதிர்காலப் பயணங்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும். ஆபரேஷன் சிந்தூர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ கீழ், பயங்கரவாதிகளின் வீடுகள் அனைத்தும் வெறும் 22 நிமிடங்களில் தரைமட்டமாக்கப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் இந்த புதிய வடிவம் உலக நாடுகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தற்போது நான் உலக நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் போதெல்லாம், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களின் மீது அவர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அதிகரித்து வருவதை உணர முடிகிறது. 2014ல் நீங்கள் அனைவரும் எங்களுக்குப் பொறுப்பு கொடுத்தபோது, நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருந்தது. ‘பலவீனமான ஐந்து’ பொருளாதாரம் என்ற பட்டியலில் இந்தியா இருந்தது. 2014க்கு முன்பு, உலகப் பொருளாதாரத்தில் நாம் பத்தாவது இடத்தில் இருந்தோம். இன்று, இந்தியா வேகமாக முன்னேறி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. நக்சல் இல்லாத பகுதிகள் இன்று, நமது பாதுகாப்புப் படைகள் புதிய தன்னம்பிக்கையுடனும், நக்சல்களை முடிவுக்குக் கொண்டுவரும் உறுதியுடனும் முன்னேறி வருகின்றன. பல மாவட்டங்கள் இன்று நக்சல் இல்லாத பகுதிகளாக மாறிவிட்டன. நக்சல் இயக்கங்களுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று வருவதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நக்சல் கட்டுப்பாட்டுப் பகுதிகள் இப்போது பசுமை வளர்ச்சி மண்டலங்களாக மாறி வருகின்றன. 2014-க்கு முன்பு நாட்டில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. இன்று, அது இரண்டு சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையில் ஒரு நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 25 கோடி ஏழை மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இதைப் பல சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து பாராட்டி வருகிறது.
பாராட்டு பஹல்காமில் நடந்த கொடூரமான அட்டூழியங்கள் மற்றும் படுகொலைகள் உலகத்தையே உலுக்கியுள்ளன. நாட்டின் நலன் கருதி, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நமது பிரதிநிதிகள் பலர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பாகிஸ்தானைப் பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தினர். தேசிய நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முக்கியமான பணிக்காக அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன்” என்றார்.