Home செய்திகள் தேசிய செய்திகள் 18 அடி நீள ராஜநாகம்.. சுலபமாக பிடித்த பெண் வனத்துறை அதிகாரி

18 அடி நீள ராஜநாகம்.. சுலபமாக பிடித்த பெண் வனத்துறை அதிகாரி

திருவனந்தபுரம், ஜூலை 7- உலகின் மிகவும் கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை, கேரள பெண் வனத்துறை அதிகாரி லாவகமாக பிடித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் கரமண ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள இடம்தான் ‘பேப்பரா’. இங்கு ‘பேப்பாரா’ வனவிலங்கு சரணாலயம் அமைந்திருக்கிறது. இங்குள்ள நீர் நிலைகளில் மக்கள் குளிப்பது வழக்கம். அப்படித்தான் நேற்று குளிக்க வந்த சிலர் ராஜநாகத்தை பார்த்திருக்கின்றனர். உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலின் பேரில்தான் வனத்துறை அதிகாரி ‘ரோஷ்னி’ சம்பவ இடத்திற்கு சென்றிருக்கிறார். ஐந்து பேர் கொண்ட விரைவு அதிரடிப் படையில் இவரும் ஒருவர். கடந்த 8 ஆண்டுகளாக 800க்கும் அதிகமான விஷம் கொண்ட பாம்புகளை பிடித்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி ரோஷ்னி, உடனடியாக ராஜநாகத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார்.
சுமார் 18 அடி நீளமும், 20 கிலோ எடையும் கொண்ட ராஜநாகத்தை, மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் ரோஷ்னி பத்திரமாக பிடித்துள்ளார். பிடிக்கப்பட்ட ராஜநாகம் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டிருபதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தெற்கு கேரளாவில் ராஜநாகத்தை பார்ப்பது மிகவும் அரிதானது. எனவே அதை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் ரோஷ்னியின் செயல் மிகுந்த பாராட்டை பெற்றிருக்கிறது. கேரளாவில் சோஷியல் மீடியாக்களில் தற்போது ரோஷ்னிதான் டிரென்டிங்காக இருக்கிறார்.
ஆனால் அவர் பாம்பை கையாண்ட விதம் தவறாக இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். “உலகின் மிகவும் விஷமுள்ள பாம்பை கையாளும் விதம் தவறாக இருக்கிறது. பாம்புகளை பிடிக்க சில தற்காப்பு உடைகள் அவசியம். அதை ரோஷ்னி அணிந்திருக்கவில்லை. மட்டுமல்லாது அவர் கையில் வைத்திருந்த குச்சி பல முறை கீழே விழுந்திருக்கிறது. இதெல்லாம் அவருக்கு போதுமான பயிற்சி இல்லை என்பதை தெளிவுப்படுத்துவதாக” கூறியுள்ளனர்.

Exit mobile version