Home செய்திகள் தேசிய செய்திகள் அரசியல் ஓய்வுக்கு பின் என்ன? மனம் திறந்தார் அமித்ஷா

அரசியல் ஓய்வுக்கு பின் என்ன? மனம் திறந்தார் அமித்ஷா

ஆமதாபாத்: ஜூலை 11-
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதும், வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்தில் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜ.,வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா. பிரதமரின் ஓய்வுக்கு பின் அமித் ஷாவே அந்த இடத்தை நிரப்புவார் என்று, பாஜ., தொண்டர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அமித் ஷா, தன் ஓய்வுக்குப் பிறகான திட்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானைச் சேர்ந்த கட்சியின் மகளிரணியினர் மற்றும் கூட்டுறவுத் துறையை சேர்ந்த பெண்கள் முன்னிலையில் அமித் ஷா நேற்று பேசியதாவது:
அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின், என் வாழ்நாள் முழுவதையும் வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன். ரசாயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் கோதுமையால் புற்றுநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்னைகள் வருகின்றன. ரசாயன உரங்கள் கலக்காத உணவுகளை சாப்பிட்டால், நாம் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.
இயற்கை விவசாயம், நோயைக் குறைப்பது மட்டுமல்லாமல் பயிர் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துகிறது. நான் என் சொந்த பண்ணையில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்; மகசூல் கிட்டத்தட்ட 1.5 மடங்கு அதிகம்.
அதிக மழை பெய்யும் போது, ​​பொதுவாக பண்ணையில் இருந்து தண்ணீர் வெளியேறும். ஆனால் இயற்கை விவசாயத்தில், ஒரு துளி கூட தண்ணீர் வெளியேறாது. ஏனென்றால் இயற்கை விவசாயம் நீர்ப்பிடிப்பு பாதைகளை உருவாக்க அனுமதிக்கிறது. அதிகப்படியான உரங்களைப் பயன்படுத்துவது அந்த நீர்ப்பிடிப்பு பாதைகளை அழித்துவிட்டது.மண்புழுக்கள் இயற்கை உரங்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், செயற்கை உரங்கள் அவற்றை அழித்துவிட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version