தெஹ்ரான்: ஜூன் 13-
பாலஸ்தீனத்தை முடித்த கையோடு, தற்போது ஈரான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களின் நிலை என்ன? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியர்களை மீட்க மத்திய அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்றைய தேதியில் ஈரானில் சுமார், 10,765 இந்தியர்கள் வசிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
பொதுவாக இந்தியாவிலிருந்து சவுதி, ஓமன், ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளுக்குதான் இந்தியர்கள் அதிகமாக செல்வார்கள். ஈரான் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி. அங்கு வேலை வாய்ப்புகள் இருந்தாலும் கூட, வேலை பார்ப்பது என்பது பாதுகாப்பானதாக இருக்காது. காரணம் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் என்றைக்கும் செட் ஆனதில்லை. ஆகவே, குடைச்சல்கள் நிறைய இருக்கும். கிளர்ச்சி குழுக்கள், மதவாத பாதுகாப்பு குழுக்கள் இது தவிர ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலின் உரசல் ஆகியவை ஈரானில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன.
இருப்பினும் இதையெல்லாம் சமாளித்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் ஈரானில் வேலை செய்து வருகிறார்கள். இஸ்ரேல் தொடங்கியுள்ள போர் காரணமாக இவர்களின் நிலைமை மோசமடைந்துள்ளது. சிக்கியுள்ள இந்தியர்களை உடனடியாக திரும்ப அழைத்து வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.