Home Front Page News கேரளாவில் கனமழையால் ரயில் சேவைகள் பாதிப்பு

கேரளாவில் கனமழையால் ரயில் சேவைகள் பாதிப்பு

திருவனந்தபுரம்: மே 27 –
கேரளாவில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக மலங்கரா அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், காலை 7 மணி முதல் 3 மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் உயர்த்தப்பட்டுள்ளது. மூவாட்டுபுழா, தொடுபுழா ஆகிய ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் பிறப்பித்துள்ளது. அதேபோல, திரிச்சூர், மலப்புரம் மற்றும் காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் 7 முதல் 11 செ.மீ., வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மே 28 முதல் மே 30ம் தேதி வரை கேரளாவின் பல இடங்களில் கனமழை (7 முதல் 11 செ.மீ., வரை) முதல் அதிக கனமழை (12-20 செ.மீ.,வரை) பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் மாதம் வரையில் இந்த மழைப்பொழிவானது நீடிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனிடையே, தொடர் மழை காரணமாக கேரளாவில் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஷோரனூர் பயணிகள் ரயில், மங்களூர் – மலபார் எக்ஸ்பிரஸ், அந்தியோதயா எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் – மங்களா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்புரஸ், கொச்சிவேலி எக்ஸ்பிரஸ், மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

Exit mobile version