Home Front Page News இந்திய ராணுவ தளவாடங்களுக்கு மதிப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் சிங்

இந்திய ராணுவ தளவாடங்களுக்கு மதிப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: ஜூலை 8-
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை காரணமாக, உள்நாட்டு ராணுவ தளவாடங்களின் மதிப்பும், தேவையும் அதிகரித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கணக்குத் துறையின் கட்டுப்பாட்டாளர்கள் மாநாட்டில் இன்று (திங்கள்) உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, 2024-ம் ஆண்டில் உலகளாவிய ராணுவச் செலவு 2.7 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தி தொழில் துறைக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
நமது நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட், பல நாடுகளின் மொத்த உள்நாட்டு மதிப்பைவிட அதிகம். மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தின் ஒரு பகுதி இது. எனவே, இந்த நிதியை சரியாக நிர்வகிக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. நிதி நடைமுறைகளில் ஏற்படும் தாமதம் அல்லது பிழை, ராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலையை நேரடியாகப் பாதிக்கும். பாதுகாப்புத் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பதற்கு ஏற்ப, கட்டுப்பாட்டாளர் என்ற நிலையில் இருந்து எளிதாக்குபவர் என்ற நிலையை பாதுகாப்பு கணக்குத் துறை கடைபிடிக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையே பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றத்திற்கு காரணம். அவரது வழிகாட்டுதலின் கீழ், நாடு தற்சார்பு அடைந்து வருகிறது. பாதுகாப்புக்கான திட்டமிடுதல், புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கான கட்டமைப்புகள் சீர்திருத்தத்தை நோக்கிச் செல்கின்றன. கடந்த காலத்தில் நாம் இறக்குமதி செய்த பெரும்பாலான தளவாடங்கள் தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இன்று முழு உலகமும் நமது பாதுகாப்புத் துறையின் மீது தனது கண்களை பதித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நாம் காட்டிய வலிமை மற்றும் உள்நாட்டு உபகரணங்களின் திறனுக்குப் பிறகு, நமது உள்நாட்டுப் பொருட்களுக்கான உலகளாவிய தேவை இன்னும் அதிகரித்துள்ளது. உலக நாடுகள் நமது பாதுகாப்புத் துறையை புதிய மரியாதையுடன் காண்கின்றன” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version