சண்டிகர்: ஜூலை 18 –
குடும்ப உறவுகளை சரிபார்க்க குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களிடம் டிஎன்ஏ சோதனை நடத்த பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: குழந்தை கடத்தல் மற்றும் பிச்சை எடுப்பதற்காக அவர்கள் சுரண்டப்படுவதை தடுக்கும் நோக்கில் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி தெருக்களில் பெரியவர்களுடன் பிச்சை எடுப்பதாக கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தி அவர்களின் உறவை சரிபார்க்க அனைத்து துணை ஆணையர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பல்ஜித் கவுர் பிறப்பித்துஉள்ளார்.
டிஎன்ஏ முடிவுகள் கிடைக்கும் வரை குழந்தைகளை நலக் குழுக்களின் மேற்பார்வையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஎன்ஏ சோதனையில் குழந்தைக்கும் அந்த குழந்தையை வைத்திருந்த நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை .
என்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.