புதுடில்லி: ”ஜூலை 4 –
அமெரிக்காவில் இருந்து, 3 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகிறது. ஜூலை 15ம் தேதி இந்தியா வந்தடையும்” என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தி உள்ளார்.
அப்பாச்சி என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, அதிரடி தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் திறன் கொண்ட ஹெலிகாப்டர் ஆகும். இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்திலும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த ஹெலிகாப்டர், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டுள்ளது இதன் தேவை அதிகரித்துள்ளதால், பிப்ரவரி 2020ம் ஆண்டு அமெரிக்காவுடன் ரூ.5,691 கோடி மதிப்பில் 6 அப்பாச்சி ரக விமானங்கள் வாங்க, இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் நீண்ட காலமாக அவை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. 6 ஹெலிகாப்டர்களில், முதற்கட்டமாக, போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்கள் ஜூலை 15ம் தேதிக்குள் வழங்கப்படும்.அடுத்த மூன்று நவம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் தொலைபேசியில் பேசுகையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் உறுதி அளித்தார். 2015ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவுடனான ரூ.13,952 கோடி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விமானப்படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், ராணுவத்தில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் பயன்பாட்டில் உள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி லடாக்கில் உள்ள கர்துங் லா அருகே ஒரு அப்பாச்சி ஹெலிகாப்டர் சேதம் அடைந்தது. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஏவுகணைகள், துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது..