Home செய்திகள் உலக செய்திகள் ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு விபத்து; 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்

ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு விபத்து; 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்

பெர்லின்: ஜூலை 28 – ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வ்ரெட்டம்பேர்க்கில் 100க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
34 பேர் படுகாயம்
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 34 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதில், மரங்களில் மோதின. இதனால் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
அதிபர் இரங்கல்
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ரயில் விபத்துக்கு காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஜெர்மனி அதிபர் பிரீட்ரிச் மெர்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிபெராச் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மீட்பு பணிகள்
நான் உள்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டு உள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Exit mobile version