Home Front Page News பண மூட்டை விவகாரம்; பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக நீதிபதி மனு

பண மூட்டை விவகாரம்; பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக நீதிபதி மனு

புதுடெல்லி: ஜூலை 18 –
பண மூட்டை சிக்கிய விவகாரத்தில், பதவி நீக்க நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதையடுத்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை வலுத்தன. வர்மாவை பதவி நீக்குவது அவ்வளவு எளிதல்ல. பார்லிமென்டில் அவர் மீது, கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். தீர்மானத்தை கொண்டு வருவதற்கு, லோக்சபாவில், 100 எம்.பி.,க்களின் ஆதரவும், ராஜ்யசபாவில், 50 எம்.பி.,க்களின் ஆதரவும் தேவை. இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆக., 22 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கண்டனத்தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் சர்மா மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கைகள் மற்றும் பதவி நீக்க நடவடிக்கைகளுக்கான பரிந்துரையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். குற்றச்சாட்டு ஆதாரமற்றது என நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்துள்ளார். விசாரணை குழுவின் முடிவுகளை ரத்து செய்யவும், பதவி நீக்கப் பரிந்துரையை ஒதுக்கி வைக்கவும் கோரியுள்ளார்.

Exit mobile version