புதுடெல்லி: ஜூலை 12 –
அந்தமான் அருகே கடல் கொந்தளிப்பு காரணமாக பாய்மரப் படகில் தத்தளித்த 2 அமெரிக்கர்களை, இந்திய கடலோர காவல் படையினர் நேற்று மீட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் ‘சீ ஏஞ்சல்’ என்ற நவீன பாய்மரப் படகில் பல நாடுகளுக்கு செல்லும் சாகச பயணத்தில் ஈடுபட்டனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த காற்று வீசியதில் படகின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாய்கள் எல்லாம் கிழிந்தன.
இதனால் அந்த படகு பயணத்தை தொடர முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தது. இத்தகவல் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்திய கடலோர காவல் படையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்திய கடலோர காவல் படையின் ராஜ்வீர் கப்பல் மீட்பு பணிக்கு சென்றது. அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே 53 மைல் தொலைவில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 அமெரிக்கர்களையும் இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்.