Home Front Page News பிஜேபிக்கு தமிழக முதல்வர் சவால்

பிஜேபிக்கு தமிழக முதல்வர் சவால்

சென்னை, ஏப்ரல் 19-
’டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது’ என, பொன்னேரி அருகே ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பத்தில் நேற்று காலை தமிழக அரசின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல், முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், திருவள்ளூர் மாவட்டத்துக்கு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டும் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் ‘நவீன தமிழ்நாட்டின் சிற்பி’. அதற்கு அடையாளமாக விளங்குகின்ற இடம் திருவள்ளூர் மாவட்டமும், அதனுடைய சுற்றுப்புறங்களும். திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களுக்கும் பலப்பல திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி வழங்கி வருகிறது. ஏற்கனவே இருந்த அதிமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் பத்தாண்டுகளாக முடங்கிக் கிடந்த உட்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.ஆனால், தமிழகத்தில் இருக்கின்ற சில எதிர்க்கட்சிகள், பொறுப்பான எதிர்க்கட்சிகளாக நடந்து கொள்ளாமல், தமிழகத்துக்கு எதிரிக்கட்சிகள் மாதிரி செயல்படுகின்றன. அவர்கள் எண்ணம் என்ன? தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்துடன் உறவாடி, தமிழகத்தையே அடகு வைக்கவேண்டும். இதுதான் அந்த சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணமாக இருக்கிறது.
நீட் தேர்வை எதிர்ப்பதாக இருந்தாலும், மும்மொழித் திட்டத்தை நிராகரிப்பதாக இருந்தாலும், வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தாலும், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிப்படைகின்ற மாநிலங்களை ஒன்று திரட்டுவதாக இருந்தாலும் திமுகதான் இந்திய அளவில் வலுவாக ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மாநில உரிமையின் அகில இந்திய முகமாக திமுகதான் இருக்கிறது.