
திருப்பதி: பிப்ரவரி 5-
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3.72 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. அதுவும் தரிசன நேரமும் குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். அந்த வகையில் பிப்ரவரி 3ஆம் தேதி மொத்தம் 69,389 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 20,247 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 3.72 கோடியாகும். சர்வ தரிசனத்தில் சுவாமி தரிசனத்தில் 6 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 4 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 2 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி (இந்த தேதி மாறுதலுக்குள்பட்டது, இதற்கான அறிவிப்பு மாதந்தோறும் 21 ஆம் தேதி வரும்), அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம்.
அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம்.





















