
சென்னை: மே 15-
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் என லட்சக்கணக்கானோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு பணியாளர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மேலும், பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்கள் நிரப்புதல், தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீதும் அரசு விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், அரசு ஊழியர்களுக்கான இந்த அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுவரை 58 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி, ஜனவரி மாதம் (01.01.2026) முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். அரசு அலுவலகங்கள் முதல் பள்ளிகள், மருத்துவமனைகள் வரை பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
மத்திய அரசு சமீபத்தில் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் தனது ஊழியர்களுக்கு அதே அளவிலான உயர்வை வழங்கியுள்ளது. இது தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். இந்த உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று அரசு கணக்கிட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் நபர்களும் அடங்குகிறார்கள். அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படி உயர்வு என்பது வெறும் சம்பள உயர்வு மட்டும் அல்ல. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க அரசு வழங்கும் கூடுதல் நிதி உதவியாகவே இது பார்க்கப்படுகிறது.குறிப்பாக கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


















