Home மாவட்டங்கள் பெங்களூர் அதிமுக பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு இழுபறி மீண்டும் பேச்சுவார்த்தை

அதிமுக பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு இழுபறி மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை: மார்ச் 14-
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி டாப் கியரில் பறத்து கொண்டிருக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் வருகிற மார்ச் 16 ஆம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணியில் அன்புமணி பாமக, அமமுக, தமாகா தவிர பெயர் சொல்லும் கட்சிகள் இல்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்த தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் திமுகவுடன் இணைந்துள்ளனர். திமுக சுமார் 23 கட்சிகளை கூட்டணியில் இணைத்து தொகுதி பங்கீட்டை வேகமாக முடித்து வருகிறது. விலகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி திமுகவிலேயே ஐயக்கியமாகிவிட்டது. திமுக தரப்பில் தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பதும், வேட்பாளர் அறிவிப்பும் தான் மீதமுள்ளது.
ஆனால் அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. மதுராந்தகம், திருச்சி ஆகிய 2 பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொது கூட்டங்கள் நடத்திவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி தமிழ்நாடு வரத்தொடங்கிவிட்டனர். கூட்டணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகள் செய்தும் நிறைவேறவில்லை. கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தார். பாஜக 50 தொகுதிகள் கேட்டு நெருக்கடி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 25-30 தொகுதிகள் ஒதுக்க எடப்பாடி முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக சார்பில் 50 தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக அதிமுக செல்வாக்காக உள்ள தொகுதிகளை பாஜக கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. பாஜகவுடன் தொகுதி பங்கீட்டை முடிக்காமல் கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்ய முடியாத நிலையில் அதிமுக உள்ளது.