
வாஷிங்டன், ஏப்ரல் 17- சர்வதேச அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழல் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கி வருகிறது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நிகழும் பொருளாதார தடைகள், எரிசக்தி விநியோக கட்டுப்பாடுகள், ஆட்சி மாற்றங்கள் என பல விஷயங்கள் இயல்பான சூழலை சீர்குலைத்து உள்ளன.இந்த மாதிரியான சூழலில் அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய 2 நாடுகளுக்கு இடையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது உலக நாடுகளிடையே கவனம் பெற்றுள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா, வெனிசுலா நாட்டினுள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்து நாடு கடத்தியது. வெனிசுலாவை தொடர்ந்து அமெரிக்காவின் குறி கியூபா மீது தான் என்று பல தகவல்கள் வெளியான நிலையில், ஈரான் நாடு டிரம்ப்பின் முக்கிய இலக்காக மாறியது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது இடைக்கால போர்நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நிலையில் உள்ளது.



















