
வாஷிங்டன்/டெஹ்ரான்: மார்ச் 21 – அதி நவீன தொழில்நுட்பம் கொண்டதும் ரேடார்களில் சிக்காததுமான அமெரிக்காவின் ‘எப்-35’ ரக போர் விமானத்தை ஈரான் கண்டுபிடித்து தாக்கியிருப்பது உலக நாடுகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின் வான் பாதுகாப்பு அரண்கள் சிதைக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் விலையுயர்ந்த மற்றும் அசைக்க முடியாதது எனக் கருதப்படும் எப்-35 விமானம், தனது வரலாற்றிலேயே இதுவரை போர்க்களத்தில் தாக்கப்பட்டதில்லை. ஆனால், நேற்று முன்தினம் ( மார்ச் 19) ஈரான் வான் எல்லைக்குள் பறந்த அந்த விமானத்தை ஈரானிய பாதுகாப்புப் படை குறிவைத்துத் தாக்கியது. ஈரான் எல்லையில் உள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் மற்றொரு எப்-35 விமானமும் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்கப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதாக ஈரான் கூறினாலும், அது மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தளத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதிர்ச்சியில் அமெரிக்கா “நாங்கள் விரும்பும் இடத்தில் பறக்கிறோம், எங்களை யாரும் சுட முடியாது’’ என்று அதிபர் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை பெருமிதம் தெரிவித்திருந்தார். ஈரானின் வான் பாதுகாப்பு முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறிய சில மணி நேரங்களிலேயே எப்-35 விமானம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த விமானத்தை இடைமறிக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு அமெரிக்காவிற்கு ஈரான் அதிர்ச்சி கொடுத்துள்ளது. எஃப்-35 விமானத்தை தாக்கியது எப்படி? ரேடார்களில் சிக்காத ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் கொண்ட இந்த எப்-35 விமானத்தை ஈரான் எப்படித் தாக்கியது என்பது குறித்து பாதுகாப்புத் துறை நிபுணர் சந்தீப் உன்னிதன் கூறும்போது, “ஸ்டெல்த் தொழில்நுட்பம் என்பது ரேடார்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியாதது. ஆனால் இத்தகைய விமானங்கள் வெளியிடும் வெப்பத்தை உணரும் திறன்வாய்ந்த ‘இன்ஃப்ராரெட்’ தொழில்நுட்பம் மூலம் இதைத் கண்டறிய முடியும். எஃப்-35 விமானம் ஒற்றை எஞ்சின் கொண்டது என்பதால், அது அதிகப்படியான வெப்பத்தை வெளியிடுகிறது. ஈரானின் ‘358’ ரக ஏவுகணைகள் அல்லது இன்ஃப்ராரெட் தேடல் மற்றும் கண்காணிப்பு முறை மூலம் அதன் வெப்பத்தை அடையாளம் கண்டு அமெரிக்காவின் எப்-35 விமானத்தை ஈரான் தாக்கியிருக்கலாம்’’ என்றார்.


















