
திருச்செந்தூர்: மே 30-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் உதவியாளரிடமே தரிசனம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா நடைபெறுவதையொட்டி பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், நேற்று காலை பிரவுன் பேண்ட், கருப்பு டி சர்ட், முகத்தில் மாஸ்க் அணிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் உதவியாளர், பாதுகாப்பு போலீஸ் அதிகாரி ஆகியோர் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு வந்தனர். முதலில் கோயில் சண்முக விலாச மண்டபம் எதிர்புறம் உள்ள வெள்ளை கல் மண்டபம் அருகே நின்று நடப்பதை கவனித்தனர். அப்போது கோயில் முகப்பில் சில அர்ச்சகர்கள் பக்தர்கள் சிலரை தரிசனத்திற்கு அழைத்து சென்றனர்.
அமைச்சரின் உதவியாளரும், அர்ச்சகர் ஒருவரிடம் சுவாமி தரிசனம் செய்வதற்கு பேரம் பேசினார். அப்போது 4 பேர் செல்வற்கு தலா ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் என பேசி ஜிபே வழியாக பணம் வாங்கியுள்ளார். பின்னர் அதிகாரியிடம் பணம் பேசி மாட்டிக்கொண்டதை உணர்ந்த கோயில் அர்ச்சகர் அங்கிருந்து செல்ல முயன்றார். உடனடியாக அமைச்சர் ரமேஷ், அங்கிருந்தவர்களிடம் விசாரித்து விட்டு நேராக அன்னதான மண்டபத்திற்கு வந்தார்.


















