
பெங்களூர்: மார்ச் 6-
இன்றைய தினம் கர்நாடக அரசின் பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். அதில் கர்நாடக அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் எங்கிருந்து வருகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு ரூபாயை கர்நாடக எங்கெல்லாம் செலவிடுகிறது என்பது குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
எப்போதும் ஓர் அரசின் நிதிநிலை அறிக்கையில்.. அதன் வருவாய் ஆதாரங்கள், செலவினங்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவரங்கள் இடம்பெறும். அதன்படி, கர்நாடக அரசின் பட்ஜெட்டில் மாநிலத்திற்கு வரும் வருவாய் மற்றும் செலவுகள் ஒரு ரூபாயில் விளக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் எப்படி வருகிறது என்பதன் மூலம், மாநிலத்தின் வருவாய் ஆதாரங்களைப் புரிந்துகொள்ளலாம். இதில், கர்நாடக மாநில வரி வருவாய் 49 பைசாவாகப் பெரும்பங்கு வகிக்கிறது. மூலதன வரவுகள் மற்றும் கடன் வாங்குதல் மூலம் 29 பைசாக்கள் கிடைக்கின்றன. மத்திய வரிகளில் இருந்து மாநிலத்திற்கான பங்கு 14 பைசாவாகவும், மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மானியங்கள் 4 பைசாவாகவும், கர்நாடகா மாநில வரி அல்லாத வருவாய் மூலம் மேலும் 4 பைசாக்கள் கிடைக்கிறது. கர்நாடக அரசு ஒரு ரூபாயை எங்குச் செலவிடுகிறது எனப் பார்க்கும்போது, கடன் செலவுகளுக்கு அதிகபட்சமாக 20 பைசாக்கள் செல்கின்றன. பிற பொதுச் சேவைகளுக்கு 18 பைசா, சமூக நலனுக்கு 15 பைசா, பிற பொருளாதார சேவைகளுக்கு 14 பைசா என ஒதுக்கப்படுகிறது. மேலும், வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கு 13 பைசா, கல்விக்கு 10 பைசா, சுகாதாரத்திற்கு 4 பைசா, குடிநீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் பிற சமூக சேவைகளுக்கு தலா 3 பைசா பயன்படுத்தப்படுகிறது. கர்நாடக அரசு கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ₹47,224 கோடி ஒதுக்கியுள்ளது.. இதைத் தொடர்ந்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறைக்கு ₹34,929 கோடியும், எரிசக்தித் துறைக்கு ₹29,947 கோடியும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (RDPR) துறைக்கு ₹26,559 கோடியும் என குறிப்பிடத்தக்க ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன
நீர்ப்பாசனத் துறைக்கு ₹22,436 கோடி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் துறைக்கு ₹22,203 கோடி, உள்துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு ₹23,100 கோடி, வருவாய்த் துறைக்கு ₹19,843 கோடி என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலத் துறைக்கு ₹18,612 கோடியும், சுகாதாரத் துறைக்கு ₹17,817 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறைக்கு ₹11,424 கோடி, வேளாண்மைக்கு ₹8,373 கோடி, உணவுத் துறைக்கு ₹7,942 கோடி, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறைக்கு ₹4,084 கோடி என நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தாண்டி பிற துறைகளுக்கு ஒட்டுமொத்தமாக ₹1,72,757 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


















