
புதுடெல்லி: மார்ச் 23-
பிரதமர் மோடி நேற்று அரசுப் பதவியில் 8,931 நாட்களைப் பூர்த்தி செய்து, இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன்பு சிக்கிம் மாநில முதல்வராக 24 ஆண்டுகளுக்கும் மேலாக (8,930 நாட்கள்) பதவி வகித்த பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 7, 2001 முதல் மே 21, 2014 வரை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத் முதல்வராகப் பணியாற்றினார். பின்னர் 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர், நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். பின்னர், 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தற்போது மூன்றாவது முறையாகப் பிரதமராக நீடிக்கிறார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி இப்போது இந்தியாவில் மிக நீண்ட காலம் அரசுத் தலைவராக இருந்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார். நாட்டின் மீதும் மக்கள் மீதும் கொண்டுள்ள தூய பக்தியே பிரதமர் மோடியை வரையறுக்கிறது. குஜராத் முதல்வராக அவர் காட்டிய உறுதி முதல், பிரதமராக அவர் வழங்கும் அர்ப்பணிப்புள்ள தலைமை வரை, அவரது வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான சேவைப் பயணமாகும்” என கூறியுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “சேவை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பில் உருவான மைல்கல் இது. இன்று பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் 8,930 நாட்கள் சாதனையை முறியடித்து, இந்தியாவின் நீண்டகால அரசுத் தலைவராகியுள்ளார். முதலில் குஜராத் முதல்வர், தற்போது பிரதமர் என 8,931 நாட்கள் பொதுவாழ்வில் அவர் இருப்பது, ‘தேசமே முதல்’ என்ற கொள்கைக்கும், நேர்மையான செயல்பாட்டுக்கும், அயராத மக்கள் சேவைக்கும் சான்றாகும்” என கூறியுள்ளார்.
இன்ஸ்டாவில் 10 கோடி: இந்த மைல்கல் சாதனையைத் தவிர, பிரதமர் மோடியின் உலகளாவிய டிஜிட்டல் செல்வாக்கும் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை அவர் சமீபத்தில் பெற்றார். இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் (4.3 கோடி) பின்தொடர்பாளர்களைவிட 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
















