Home மாவட்டங்கள் பெங்களூர் ஆதவ் அர்ஜுனா கருத்தில் உண்மையில்லை- ரஜினி கடும் கண்டனம்

ஆதவ் அர்ஜுனா கருத்தில் உண்மையில்லை- ரஜினி கடும் கண்டனம்

சென்னை: மார்ச் 17 –
தவெகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா என்னை பற்றி கூறியது உண்மைக்கு மாறானது என ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் ஆதவ் அர்ஜுனா அண்மையில் என்னை பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுன மூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்டோருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும். இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து தவெக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் விரட்டியது திமுக தான். திமுகவின் மிரட்டலுக்கு பயந்து அரசியலுக்கு வராமல் போன ரஜினி திமுக குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களிலே நடிக்கும் நிலைமைக்கு போய்விட்டார்.
விஜய்க்கு அந்த மன தைரியம் அதிகமாக இருப்பதால் தான் அவர் அரசியலில் இறங்கியிருப்பதாக” ஆதவ் ஒப்பிட்டு பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கருத்து சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ரஜினி ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அது போல் அரசியல் கட்சி தலைவர்களும் ரஜினி மிகப் பெரிய ஆளுமை, நல்ல பண்பாளர், மிரட்டலுக்கு அடிபணியாதவர் என தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் 12 ஆம் தேதி நடந்தது. அன்று முதல் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். தற்போது ரஜினியின் இந்த விளக்கத்தால் அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தவெகவுக்கு ரசிகர்கள் யாரும் ஓட்டு போடக் கூடாது என்ற முடிவிலும் இருக்கிறார்கள் என தெரிகிறது.
எனவே ரஜினி குறித்து அவதூறு கருத்து கூறிய ஆதவ் அர்ஜுனா, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதுவரை விஜய் வாய் திறந்து எதையும் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனாவை கண்டிக்கவும் இல்லை. அரசியல் கட்சியை தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என ரசிகர்கள் முன்னிலையில் ரஜினி பேசியிருந்தார். இந்த நிலையில் அப்போது கொரோனாவின் கோரத்தாண்டவம் இருந்தது. இதனால் தனது உடல்நிலையை காட்டிலும் ரசிகர்கள், மக்களின் பாதுகாப்பும் உயிரும்தான் முக்கியம் என கருதியதால் அரசியலுக்கு வரும் எண்ணத்தை கைவிடுகிறேன் என 2020 ஆம் ஆண்டு ரஜினி அறிவித்தார். இதற்கு ரசிகர்கள் அன்பாக எதிர்ப்பை காட்டினாலும் தனது முடிவை மறுபரிசீலனை செய்யாமல் இருந்தார் ரஜினி.