
பெங்களூரு, மார்ச் 28- டி20 உலகக் கோப்பைத் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் கிளாசிக் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்ப இந்திய அணி அரையிறுதியில் நுழைந்தது. இன்றைய தினத்தில் அந்த கோலி கிளாசிக் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஏரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஷேன் வாட்சன், ஜேம்ஸ் ஃபாக்னர், பீட்டர் நெவில், ஆடம் சாம்ப்பா, நேதன் கூல்ட்டர் நைல், ஜோஷ் ஹாசில்வுட். ஆகிய ஜாம்பவான்கள் இருந்தனர். இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், தோனி, ஹர்திக் பாண்டியா, அஸ்வின், நெஹ்ரா, பும்ரா என்று பெரும் ஜாம்பவான்கள் ஆடினர். டாஸ் வென்ற ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். கவாஜாவும் ஏரோன் பிஞ்ச்சும் ஓப்பனிங் இறங்கினர். இருவரும் விளாசிய விளாசலில் 4.2 ஓவர்களில் ஸ்கோர் 50 ரன்களைக் கடந்தது, கவாஜா அடித்த 26 ரன்களில் 24 ரன்கள் பவுண்டரிகள் மூலம் வந்தது. ஆஷிஷ் நெஹ்ரா அன்று அட்டகாசமாக வீசினார். 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இவரது ஒரே விக்கெட் கவாஜா. அஸ்வினின் முதல் ஓவரில் 22 ரன்கள் விளாசப்பட்டது, ஃபிஞ்ச் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களை அடித்தார். ஆனால் அடுத்த ஓவரில் அபாய வீரர் டேவிட் வார்னரை அஸ்வின் ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தினார். பந்து திரும்பியது, இறங்கி வந்து ஆடிய வார்னர் மட்டையை ஏமாற்றி தோனியிடம் செல்ல முடிந்தது வார்னர் கதை. கிளென் மேக்ஸ்வெல் தடவலாக ஆடி 28 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார், ஷேன் வாட்சன் 18, பவர் ஹிட்டர் என்று அறியப்பட்ட நெவில் இறங்கி 2 பந்துகளையே சந்தித்தார் ஆனால் அதில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என்று 10 ரன்களையும் ஃபாக்னர் 10 ரன்களையும் எடுக்க, பிஞ்ச் அதிகபட்சமாக 43 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 160/6 என்று முடிந்தது. இந்தியத் தரப்பில் நெஹ்ரா பிரமாதம், பும்ரா 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அஸ்வின் 2 ஓவர் 31 ரன்கள். ஜடேஜா டைட்டாக வீசி 3 ஓவர் 20 ரன்கள். யுவராஜ் சிங் 3 ஓவர் 19 ரன் ஒரு விக்கெட். ஹர்திக் பாண்டியா 4 ஓவர் 36 ரன்கள் 2 விக்கெட். 161 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்தியா இறங்கிய போது ரோஹித் 12 ரன்களிலும் தவான் 13 ரன்களிலும் அபாய வீரர் சுரேஷ் ரெய்னா 10 ரன்களிலும் வெளியேற ஸ்கோர் 49/3 என்று 8வது ஓவரில் கொஞ்சம் சிக்கலாக மாறியிருந்தது. ஆனால் விரட்டல் மன்னன் விராட் கோலி இருந்தார்.




















