
புதுடெல்லி, ஏப்ரல் 9- ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் விமான எரிபொருட்களின் விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. இது விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களான இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் எரிபொருள் விலை உயர்வால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன. இதனால் விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. விமான எரிபொருள்களுக்கு கூடுதல் கட்டணங்களையும் அதிகப்படுத்தின. இது விமான சேவைகளை பயன்படுத்தக்கூடிய மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த சூழலில் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு ஒரு புதிய சலுகையை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. விமான நிறுவனங்கள் மேற்கொண்டு டிக்கெட் விலையை உயர்த்தி அவர்கள் மீது நிதி சுமையை போடாமல் இருக்க இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு விமானங்களுக்கான விமான லேண்டிங் மற்றும் நிறுத்துமிட கட்டணங்களை 25 சதவீதம் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. விமான எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட கூடுதல் செலவுகள் விமான நிறுவனங்களுக்கு அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பல்வேறு நிதி நெருக்கடியை இந்த நிறுவனங்கள் சந்திப்பதாக மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வந்தன. இதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. எனவே இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களுக்கான லேண்டிங் மற்றும் நிறுத்துமிட கட்டணங்களை 25% குறைக்க இந்திய விமான நிலையங்களின் பொருளாதாரம் ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்த சலுகை உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மட்டுமே பொருந்தும் என கூறியுள்ளது. முதல் கட்டமாக மூன்று மாதங்களுக்கு இந்த கட்டண குறைப்பு அமலில் இருக்கும் அதன் பிறகு சூழலை பொறுத்து இது மறு பரிசீலனை செய்யப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.




















