Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் – ரஷ்யா அறிவிப்பு

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் – ரஷ்யா அறிவிப்பு

டெல்லி: மார்ச் 4-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா அறிவித்துள்ளது.
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஜனவரி 2026-இல் ரஷ்யாவிலிருந்து 1.98 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 44 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவு.
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்துக்குப் பின்னர், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் எண்ணெய் வாங்குவதை அதிகரித்தது. ஜனவரி 2026-இல் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 16.6% ஈராக்கிலிருந்து வந்தது. சவுதி அரேபியாவின் இந்திய எண்ணெய் இறக்குமதி பங்கு ஜனவரி 2026-இல் 17.5% ஆக உயர்ந்தது. இந்நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், இந்த அனைத்து வளைகுடா நாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கான எண்ணெய் விநியோகம் ஆபத்தில் உள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரானுடனான மோதலுக்குப் பிறகு வளைகுடா மற்றும் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதி தற்போது ஆபத்தில் உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 8% அதிகரித்து, மார்ச் 2-ஆம் தேதி ஒரு பீப்பாய்க்கு 80 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி, ஓமான் வளைகுடா வழியாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், இந்தியாவுக்கு ரஷ்யா கச்சா எண்ணெயை அனுப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா இவ்வாறு அறிவித்துள்ளது.