
வாஷிங்டன்: ஏப்ரல் 3-
வரிகள் விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்தார். இதற்கிடையே மீண்டும் காப்புரிமை பெற்ற மருந்துகளை இறக்குமதி செய்யும்போது அதிகபட்சம் 100% வரை வரி விதிக்கக்கூடிய ஒரு நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அதிக மருந்துகள் அனுப்பப்படும் சூழலில், டிரம்பின் இந்த உத்தரவு கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்தாண்டு திடீரென உலக நாடுகள் மீது வரிகளை விதித்தது அனைவருக்கும் தெரியும். இந்தியா, கனடா என எந்தவொரு நட்பு நாடுகளையும் விடாமல் அனைத்து நாடுகள் மீதும் டிரம்ப் வரிகளை அறிவித்து இருந்தார். இது அமெரிக்கா உடனான உலக நாடுகளின் உறவுகளை மிகக் கடுமையாகப் பாதித்தது. நடுவில் சில காலம் வரி விஷயத்தில் அமைதியாக இருந்த டிரம்ப், இப்போது மீண்டும் அதைக் கையில் எடுத்துள்ளார்.
100% வரி அதாவது காப்புரிமை பெற்ற மருந்துகளை இறக்குமதி செய்யும்போது அதிகபட்சம் 100% வரை வரி விதிக்கக்கூடிய ஒரு நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதிபர் டிரம்ப் இரு கண்டிஷன்களை போடுகிறார். அதை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 100% வரை வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் எப்போதும் காப்புரிமை பெற்ற மருந்துகள் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்கப்படும். அதைக் குறைக்க வேண்டும்.. “அதிக சலுகை பெறும் நாடு” (most favoured nation) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விலையைக் குறைக்க வேண்டும்.
அடுத்து அமெரிக்காவிலேயே மருந்துகளை உற்பத்தி செய்யத் தேவையான ஆலையை உருவாக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்தால் மட்டுமே வரி விலக்கு வழங்கப்படும்.



















