
சென்னை, ஏப்ரல் 7- டி20 போட்டிகளில் டெத் ஓவர்கள் என கூறப்படும் 16 முதல் 20 ஓவர்கள் வரையிலான காலக்கட்டம் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் தங்களது பல்வேறு திறன்களை கையாண்டு எதிரணியின் பேட்ஸ்மேன்களை பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள அனுமதிக்காமல் கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள். நடப்பு ஐபிஎல் சீசனில் இந்த இறுதிக்கட்ட ஓவர்களில் சிஎஸ்கே அணி மாற்று சிந்தனைகள் இல்லாமலும், செயலற்ற தன்மையுடன் இருப்பதாக விமர்சனங்கள் எழத்தொடங்கி உள்ளன. 2026-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் 12.1 ஓவர்களிலேயே முடிவடைந்தது. சிஎஸ்கேவுக்கு எதிராக 128 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணி 47 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது.
இதை தவிர்த்து பஞ்சாப், ஆர்சிபி அணிகளுக்கு எதிராக சிஎஸ்கே அணி டெத் ஓவர்களில் 40 பந்துகளை வீசி 111 ரன்களை தாரைவார்த்துள்ளது. இது மோசமான சாதனையாகும். ஏனெனில் இறுதிக்கட்ட ஓவர்களில் சிஎஸ்கேவின் எகானமி ரேட் 16.65 ஆக உள்ளது.
இது மற்ற அணிகளைவிட மோசமானது. நேற்று முன்தினம் பெங்களூருவில் சிஎஸ்கேவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி 250 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி 250 ரன்களை தாரை வார்த்தது இதுவே முதன்முறையாகும். மேலும் டெத் ஓவர்களில் சிஎஸ்கே 78 ரன்களை வாரி வழங்கியது. இதுவும் முதன்முறையாக நிகழ்ந்தது. அனைத்துக்கும் மேலாக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் இறுதிக்கட்ட ஓவர்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறினர்.





















