
மும்பை, மார்ச் 6- ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பீல்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் சஞ்சு சாம்சன் மிட்ஆ ன் திசையில் பவுண்டரி ஒன்றையும், லெக் திசையில் சிக்ஸர் ஒன்றையும் பறக்கவிட்டார். முதல் ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டன. வில் ஜேக்ஸ் வீசிய 2-வது ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டிய அபிஷேக் சர்மா கடைசி பந்தை லெக் திசையில் தூக்கி அடித்த போது பில் சால்ட்டிடம் கேட்ச் ஆனது. 7 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சஞ்சு சாம்சன், அடுத்த பந்தை மிட் ஆன் திசையை நோக்கி வலுவாக அடித்தார். அப்போது அங்கு நின்ற ஹாரி புரூக் கேட்ச்சை தவறவிட்டார். இதை சாம்சன் பயன்படுத்திக் கொண்டு 4-வது பந்தை சிக்ஸருக்கும், கடைசி பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார். இந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டன. வில் ஜேக்ஸ் வீசிய 4-வது ஓவரில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் தலா ஒரு பவுண்டரி விரட்ட 11 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஜேமி ஓவர்டன் வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்டரிகளை விரட்டினார். சேம் கரண் வீசிய 6-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகள் அடித்தார். பவர்பிளேவில் இந்திய அணி 67 ரன்கள் சேர்த்தது.



















