
சென்னை: மார்ச் 25-
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதனைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பெற்றுக் கொண்டார். மொத்தமாக அதில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அதிமுக.வின் முழு தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும். குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை செலுத்தப்படும். மகளிரைப் போலவே, ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலமாக வீடு இல்லாத ஏழைகளுக்குக் கிராமங்களில் கான்கிரீட் வீடுகளும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி வீடுகளும் விலையில்லாமல் கட்டித் தரப்படும்.மேலும், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். வேலைக்குச் செல்லும் 5 லட்சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். முதியோர், கணவனை இழந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும், வங்கிகளில் கல்விக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளவர்களின் கடனை அரசே ஏற்கும்.


















