
இஸ்லாமாபாத்: பிப்ரவரி 7-
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 69 பேர் உயிரிழந்தனர்.
169-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் மக்கள் தொகை 25 கோடி ஆகும். இதில் சுமார் 85 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள் ஆவர். சுமார் 10 முதல் 15 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள் ஆவர். இருதரப்பினர் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக ஷியா பிரிவு மசூதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.
இந்த சூழலில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று பிற்பகல் தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறினார். இதில் 69 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 169-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தலைநகர் இஸ்லாமாபாத் முழுவதும் அவசர நிலை அமல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்லாமாபாத் போலீஸ் மூத்த அதிகாரி ஜாவத் கூறியதாவது:
இஸ்லாமாபாத்தில் தர்லாய் கலான் பகுதியில் உள்ள கஸ்ர்-இ-கஜீஜதுல் குப்ரா என்றழைக்கப்படும் ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டியிருந்த தற்கொலைப் படை தீவிரவாதி மசூதிக்குள் நுழைய முயன்றார்.
அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியபோது. அந்த தீவிரவாதி வெடித்துச் சிதறினார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இவ்வாறு போலீஸ் அதிகாரி ஜாவத் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, “மசூதியை குறிவைத்து கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள்” என்றார்.
இதுகுறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சினையில் இரு தரப்பும் தாக்கிக் கொள்கின்றனர்.
பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது அலி ஜின்னா, ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர். அந்த நாட்டை கட்டமைத்த பல்வேறு தலைவர்கள் ஷியா முஸ்லிம்கள் ஆவர். ஆனால் கடந்த 1980-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.இதன் பின்னணியில் சன்னி கிளர்ச்சிக் குழுக்கள் உள்ளன. இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

















