
தெஹ்ரான், மார்ச் 20- மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் போர் மோசமாகிக் கொண்டே போகிறது. ஏற்கனவே இதனால் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் உலக இணையச் சேவையும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் இடையே மூன்று வாரங்களாக நீடிக்கும் போர், தற்போது முடிவதாகத் தெரியவில்லை. ஏற்கனவே இந்த மோதலில் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அடுத்தகட்டமாக ஈரான் உலக இணையச் சேவையைக் கூட முடக்கலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது.
இணைய கேபிள்கள் ஹார்முஸ் வழியே செல்லும் முக்கிய கடல்நீர் இணையக் கேபிள்களை ஈரான் துண்டித்தால் அது ஒட்டுமொத்த உலகையும் முடக்கிவிடும். ஹார்முஸ் முடங்கியதுடன், செங்கடலில் உள்ள பாப் எல்-மண்டேப் பகுதியும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி குழுக்கள் முடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. உலகின் டிஜிட்டல் ரத்த நானங்கள் எனப்படும் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் இந்த இரண்டு முக்கிய வழித்தடங்கள் தான் வழியாகவே செல்கின்றன. வீடியோ அழைப்புகள், மின்னஞ்சல்கள் முதல் வங்கிப் பரிமாற்றங்கள், செயற்கை நுண்ணறிவு சேவைகள் வரை உலக இணையத் தரவுகள் அனைத்தையும் இந்தக் கேபிள்களே சுமந்து செல்கின்றன. நம்மில் பெரும்பாலானோர் இணையம் என்றாலே ஏதோ சாட்டிலைட் மூலமாகவே இயங்குவதாக நினைத்துக் கொள்வோம். ஆனால், உண்மையில் இதுபோல கடலுக்கு அடியில் போடப்பட்டு இருக்கும் கேபிள்கள் தான் இணையச் சேவைக்கு உயிர்நாடியாக இருக்கிறது. ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடல் கண்ணிவெடிகளைப் பதித்துள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்து இந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. இதற்கிடையில், செங்கடலில் ஏமனைச் சேர்ந்த ஹவுதி குழுக்கள் கடந்துசெல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், அந்த நீர்வழியும் அபாய மண்டலமாக மாறியுள்ளது. இந்த இரண்டுமே இங்குள்ள இணையக் கேபிள்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

















