ஈரான் ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டேன்” – கார்த்தி சிதம்பரம்

திருப்புவனம்: மார்ச் 5-
ஈரான் ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டேன் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக் கூடம் சாவி ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். அதற்காக நான் எப்போதும் ஈரான் ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டேன். அவர்கள் அந்நாட்டு மக்களையே துன்புறுத்தினர். விலைவாசி உயர்வுக்கு எதிராக போராடிய 7,000 பேர் இறந்துள்ளனர். பெண்கள், ஒலிம்பிக் வீரரை தூக்கிலிட்டுள்ளனர்; எழுத்தாளர்களை கைது செய்துள்ளனர். அதற்கு ஏன் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை? ஈரான் உச்சபட்ச தலைவருக்கு எதிராக சொல்கிறேன் என்பதற்காக முஸ்லிம்களை எதிர்த்து பேசியதாக கூற முடியாது.
மக்களுக்கு எதிராக இந்துக்கள் செய்தாலும், முஸ்லிம்கள் செய்தாலும் கண்டிக்கத்தான் செய்வேன். மக்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பதை வரவேற்கிறேன். போதைப்பொருள் புழக்கம் என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல, அது நாடு முழுவதும் உள்ள பிரச்சினை. இவ்வாறு அவர் கூறினார். எம்பிக்கு எதிராக போராட்டம்:
ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்ததை கண்டித்து முஸ்லிம்கள் பலர் சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர்.
இந்நிலையில் நேற்று கார்த்தி சிதம்பரத்தை கண்டித்து சிவகங்கை அரண்மனைவாசலில் முஸ்லிம்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவருக்கு எதிராக கோஷமிட்டதோடு, அவரது உருவப்படத்தை தீவைத்து எரித்தனர். அவர்களை போலீஸார் தடுக்க முயன்றனர்.