
டெஹ்ரான்: மார்ச் 4-
ஈரானில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் செயல்படும் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை குறி வைத்து அமெரிக்க விமானப் படையின் அதிநவீன பி-2 போர் விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈரானின் பல்வேறு பகுதிகளில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன. இவை ஏவுகணை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் உளவுத் துறை தகவல்களின்படி ஈரான் தலைநகர் டெஹ்ரான், கெர்மன் ஷா, செம்னான் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கடியில் சுமார் 5 ஏவுகணை ஆலைகள் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. அந்த ஆலைகளை போர் விமானங்களில் இருந்து வீசப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளால் அழிக்க முடியாது. சில நூறு அடி ஆழத்துக்கு பூமியை துளைத்துச் சென்று, பின்னர் வெடித்துச் சிதறும் அதிநவீன வெடிகுண்டுகளால் மட்டுமே அழிக்க முடியும். அந்த வகையில் அமெரிக்காவிடம் ஜிபியு -57 என்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளன.
இந்த வெடிகுண்டுகள் பூமியை துளைத்துச் சென்று, வெடித்துச் சிதறும் தன்மை கொண்டவை. 20.5 அடி நீளம், 2.6 அடி விட்டம், 14,000 கிலோ எடை கொண்ட ஜிபியு -57 வெடிகுண்டுகளை அமெரிக்காவின்
எப் – 16, எப் – 22, எப் – 35 உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களால் சுமந்து செல்ல முடியாது.அமெரிக்க விமானப் படையின் பி-2 ரக போர் விமானத்தால் மட்டுமே ஜிபியு -57 வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். ஒரு பி-2 போர் விமானத்தில் 2 ஜிபியு -57 வெடிகுண்டுகளை மட்டுமே பொருத்த முடியும்.
ஈரான் ராணுவத்தின் மிகப்பெரிய பலமாக ஏவுகணைகள் விளங்குகின்றன. அந்த நாட்டிடம் 300 கி.மீ. முதல் 3,000 கி.மீ. தொலைவு வரை பாயும் திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ளன.
இந்த ஏவுகணைகள் மூலமாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதை முறியடிக்க ஈரானின் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளை முழுமையாக அழிக்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்காவில் இருந்து நான்கு பி-2 போர் விமானங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட பி-2 போர் விமானங்களை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்களில் தரையிறக்க முடியாது.
அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வொயிட்மேன், குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப் படைத் தளங்களில் மட்டுமே பி-2 போர் விமானங்களை கையாள முடியும்.
இவை தவிர இந்திய பெருங்கடலில் அமெரிக்கா, பிரிட்டன் இணைந்து நிர்வகிக்கும் டியாகோ கார்சியா தீவில் உள்ள விமானப் படைத் தளம், பிரிட்டனின் குளோஸ்டர்ஷையர் விமானப் படைத் தளத்தில் மட்டுமே பி-2 விமானத்தை தரையிறக்க முடியும். ஆனால் இந்த விமானப் படைத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முதலில் அனுமதி வழங்க மறுத்ததாகவும், 48 மணி நேர கால தாமதத்துக்குப் பிறகு அனுமதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.















