
டெஹ்ரான்: ஏப்ரல் 4
பிப்ரவரி 28ஆம் தேதியில் இருந்து ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிர ராணுவ தாக்குதலை நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மற்றும் சுற்றி இருக்கக்கூடிய வளைகுடா நாடுகளின் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போர் பல்வேறு நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டையும் லாக் டவுன் போன்ற ஒரு சூழலையும் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஈரான் போர் அந்த ஒரு நாட்டை மட்டுமில்லாமல் சுற்றி இருக்கக்கூடிய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரான் நாட்டு ராணுவம் தொடர்ச்சியாக ஐக்கிய அரபு அமீரகம் , சவுதி உள்ளிட்ட நாடுகளின் கட்டமைப்புகள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த சூழலில் ஈரான் போரை மையமாக வைத்து அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன்கள் புதிய தொழிலில் முதலீடு செய்து லாபம் பார்த்து வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகி வரும் வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை விற்பனை செய்து டிரம்பின் மகன்கள் லாபம் பார்க்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஃபுளோரிடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பவரஸ் என்ற நிறுவனத்தில் அண்மையில் தான் டொனால்ட் ட்ரம்பின் மகன்களான எரிக் டிரம்ப் மற்றும் டிரம்ப் ஜூனியர் ஆகியோர் கணிசமான பங்குகளை வாங்கியுள்ளனர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு தான் அமெரிக்க சிறப்பு ராணுவ படையில் வேலை செய்த முன்னாள் வீரர்களால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் வானிலேயே டிரோன்கள், ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பங்களை விற்பனை செய்கிறது. தானியங்கி முறையில் செயல்படும் இந்த தொழில்நுட்பங்கள் தற்போது அதிக அளவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்கப்படுகிறதாம்.
தற்போது ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வான் பாதுகாப்பு அமைப்புக்கான தேவை அதிகரித்திருக்கிறது. பவரஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுல் ஒருவரான வெலிகோவிச், இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு நாடுகளும் ஆர்வத்துடன் வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்து வருவதாகவும் தங்கள் குழுவினர் அங்கே சென்று பல்வேறு டெமோக்களை செய்து காட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த தொழில்நுட்பம் பல்வேறு மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும் என சுட்டிக்காட்டிருக்கிறார்.




















