Home செய்திகள் தேசிய செய்திகள் ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு – தாறுமாறாக சரிந்த தங்கம் விலை

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு – தாறுமாறாக சரிந்த தங்கம் விலை

டெல்லி, ஏப்ரல் 6- பொதுவாக போர் பதற்றம் ஏற்பட்டாலே தங்கத்தின் விலை வேகமாக உயரும். ஆனால் ஈரான் போரில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஈரான் போர் தொடங்கியதில் இருந்து உலக அளவிலும், சரி இந்தியாவிலும் சரி தங்கத்தின் விலை பெருமளவில் சரிவை கண்டது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன, அமெரிக்க டாலர் வலுப்பெற்றது. எனவே முதலீட்டாளர்கள் தங்கம் வெள்ளியை விடுத்து அமெரிக்க டாலரிலும் கச்சா எண்ணெயிலும் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கினர். ஈரான் போர் தீவிரமடைய தீவிரமடைய தங்கத்தின் விலை குறைந்த வண்ணமே இருக்கிறது. இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவு செய்த அவர் செவ்வாய்க்கிழமை அன்று ஈரான் மீது இதுவரை இல்லாத அளவு கடுமையான தாக்குதல் நடத்தப்படும், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் உங்களின் வாழ்க்கை நரகமாகிவிடும் என மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை விடுத்திருந்தார். டிரம்பின் இந்த எச்சரிக்கை உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரான் தரப்போ தாக்குதலை தொடர்வோம் என பதிலடி தந்துள்ளது. இதனால் மேற்காசியா போர் மீண்டும் வேகம் எடுத்து இருக்கிறது. டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து தொடக்க வர்த்தக நேரத்தில் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. அதாவது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1.7 சதவீதம் வரை சரிவடைந்து 4610 டாலர்களாக வர்த்தகமாகியது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை 12 சதவீதம் குறைந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, பணவீக்கம் அதிகரித்தது, பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் உயர்ந்ததுமே இதற்கு முக்கிய காரணம்