Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தீவிரம்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தீவிரம்

வாஷிங்டன்: மார்ச் 9 –
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலை
யங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதல்களைத் தொடங்கிஉள்ளன. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலையும் ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் 9-வது நாளை எட்டியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தன. இதற்குபதில் கொடுக்கும் விதமாகவும், ஈரானின் பொருளாதார வலிமையை குறைக்கும் நோக்கிலும் அதன் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
சாலைகளில் ஓடும் எண்ணெய்: குறிப்பாக, டெஹ்ரானில் உள்ள 4 எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், கச்சா எண்ணெய் வெளியேறி, சாலைகளில் ஆறாக ஓடித் தீப்பிடித்தது. இதனால், பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 4 லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். அதேபோல, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, ஈரானில் பல எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிவதால், விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்துள்ளது. இதனால், அப்பகுதியே இருளில் மூழ்கியுள்ளதுடன், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட தகவல்களின்படி, பாதுகாப்புப் பணியில் இருந்த ஈரானிய வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலின்போது உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, குவைத்தில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில், அமெரிக்க ஹெலிகாப்டர் பழுதுபார்க்கும் மையங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலையும் ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது.
ட்ரம்ப் விலை தரவேண்டும்: இதற்கிடையே, ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்த விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரானின் பாதுகாப்பு தலைவரும், காமேனியின் முதன்மை ஆலோசகருமான அலி லாரி ஜானி கூறியதாவது: எங்களது உச்ச தலைவர் காமேனி மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததை சாதாரண விஷயமாக கடந்து செல்லமுடியாது. எங்கள் உச்ச தலைவர் சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவோம். இதற்கான விலையை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்தே தீர வேண்டும்.