Home விளையாட்டு உலகக்கோப்பை வென்ற கேப்டன் படம் போட்ட டி-சர்ட்டுக்கு தடை

உலகக்கோப்பை வென்ற கேப்டன் படம் போட்ட டி-சர்ட்டுக்கு தடை

மெல்போர்ன், மார்ச் 27- ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற ஷெஃபீல்டு ஷீல்டு இறுதிப் போட்டியின் போது, பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன் இம்ரான் கானுக்கு ஆதரவாக டி-சர்ட் அணிந்து வந்த ரசிகர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த ரசிகருக்கு தற்போது அனுமதி வழங்கியுள்ளது . விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மெல்போர்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண வந்த லூக் பிரவுன் என்ற ரசிகர், “இம்ரான் கானை விடுதலை செய்” என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை அணிந்து இருந்தார். இதனைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள், இது அரசியல் ரீதியான முழக்கம் என்று கூறி அவரை மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர். அந்த டி-சர்ட்டை மறைத்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதித்தனர். இந்தச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா உடனடியாக இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்தது. இது குறித்து விளக்கம் அளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்தித் தொடர்பாளர், “இம்ரான் கானின் நலன் குறித்து கிரிக்கெட் உலகில் பெரும் கவலை நிலவி வருகிறது. எனவே, இதனை ஒரு அரசியல் விஷயமாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையிலான விஷயமாகவே நாங்கள் கருதுகிறோம். அந்த ரசிகர் அந்த டி-சர்ட்டுடன் மைதானத்திற்குள் வரத் தடை ஏதுமில்லை” என்று தெரிவித்தார். 1992-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த இம்ரான் கான், 2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மற்றும் சிறையில் அவர் நடத்தப்படும் விதம் குறித்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் சுனில் கவாஸ்கர், கிரெக் சேப்பல் உள்ளிட்ட 14 முன்னாள் சர்வதேச கேப்டன்கள் இம்ரான் கானுக்கு சிறையில் முறையான சிகிச்சை அளிக்கக் கோரி மனுவில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது ஆச்சரியமடைந்ததாகத் தெரிவித்த ரசிகர் லூக் பிரவுன், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விரைவான முடிவைப் பாராட்டினார். இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் தற்போது ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.