Home மாவட்டங்கள் பெங்களூர் ‘எங்க எம்எல்ஏ-வுக்கு சீட் கிடைக்கக் கூடாது’ – கோயிலில் கடலூர் காங்கிரசார் வேண்டுதல்

‘எங்க எம்எல்ஏ-வுக்கு சீட் கிடைக்கக் கூடாது’ – கோயிலில் கடலூர் காங்கிரசார் வேண்டுதல்

கடலூர்: மார்ச் 14-
காங்கிரஸுக்கு 28 தொகுதிகளை திமுக இறுதி செய்திருந்தாலும் இன்னும் தொகுதிகள் எதுவென்று இறுதியாகவில்லை. அதற்குள்ளாக, ‘எங்க எம்எல்ஏ-வுக்கு சீட் கிடைக்கக் கூடாது’ என்று கொளஞ்சியப்பர் கோயிலில் பிராது கட்டும் அளவுக்குப் போயிருக்கிறது கடலூர் காங்கிரஸாரின் கோஷ்டி கானம்.கடலூர் மாவட்ட காங்கிரஸில் விருத்தாசலம் எம்எல்ஏ-வான ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், கடலூர் எம்பி-யான விஷ்ணு பிரசாத் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. அண்மையில் ராதாகிருஷ்ணனின் ஆதரவுபெற்ற லாவண்யா மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான், ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் விருத்தாசலம் சீட் கிடைக்க வேண்டும் என லாவண்யா தரப்பும், கிடைக்கக் கூடாது என எதிர்தரப்பும் கொளஞ்சியப்பர் கோயிலில் பிராது கட்டி வழிபாடு நடத்தி அசரடித்திருக்கிறார்கள். விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் இருக்கிறது பழமையான கொளஞ்சியப்பர் கோயில். இங்கு முனியப்பர் சந்நிதி முன்பாக இருக்கும் சூலாயுதத்தில் தாங்கள் நினைத்ததை ஒரு சீட்டில் எழுதி பிராது கட்டினால் வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை. அப்படித்தான் லாவண்யா தனது ஆதரவாளர்கள் சகிதம் சென்று பிராது கட்டி இருக்கிறார்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட எதிரணியைச் சேர்ந்த மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெயகுரு, நேற்று தனது ஆதரவாளர்கள் சகிதம் கொளஞ்சியப்பர் கோயிலுக்குச் சென்று, ‘ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் சீட் கிடைக்கக் கூடாது’ என்று பிராது கட்டிவிட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக லாவண்யாவிடம் கேட்டதற்கு, ‘‘ராதாகிருஷ்ணனுக்கு தொகுதி மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது. தொகுதிக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவர் மீண்டும் வந்தால் எஞ்சிய குறைகளையும் சரிசெய்வார். அதனால் மீண்டும் அவருக்கே தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும் என பிராது கட்டி வேண்டியிருக்கிறோம்” என்றார்.