Home மாவட்டங்கள் பெங்களூர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் எதற்கு..? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் எதற்கு..? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை : மார்ச் 20 –
திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்திடும் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
அதில், “ஜனநாயக அறப்போர்க் களத்திற்குக் கொள்கை வீரர்களாகக் கழகத்தினர் அணிவகுக்கும் நேரம் இது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை உங்களில் ஒருவனான நான், உங்களின் குரலாக எடுத்துச் சொன்னேன்.வெற்றி நிச்சயம். அதற்கான இலக்கை அடைவதற்கு எவ்வித சமரசமுமின்றி இயக்கத்திற்காக உழைப்பது ஒன்றே இலட்சியம். அந்த உறுதியுடன்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமைக் கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. திராவிட மாடல் 2.0 அரசு அமைந்தே தீரும்.
உங்களில் ஒருவனான என் மனதில் அந்த உறுதி இருக்கிறது. அதற்குக் காரணம், எத்தகைய எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் முறியடித்திடும் ஆற்றல் பெற்ற கழக உடன்பிறப்புகளான நீங்கள் உறுதுணையாக இருந்து உழைப்பதுதான். அதனால்தான் உங்களின் முகம் காணும்போது நான் உற்சாகமடைகிறேன்; ஊக்கம் கொள்கிறேன்; உத்வேகம் பெறுகிறேன். மார்ச் 17-ஆம் நாள் முதல், அண்ணா அறிவாலயத்தில், கழகத்தின் சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறேன். உங்களில் ஒருவனான என் முகம் காண நேர்காணலில் நீங்கள் எந்தளவு ஆர்வம் காட்டுகிறீர்களோ, அதைவிடக் கூடுதல் ஆர்வத்துடன் உடன்பிறப்புகளான உங்களின் முகம் காண நான் விரும்புவதால்தான், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் பல மணிநேர அளவில் நேர்காணல் நடைபெறுகிறது.
முதல்நாள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகளிடம் நேர்காணல் நடத்தினேன். தமிழ்நாட்டிற்கு முன்பாகவே புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. புதுச்சேரி கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் புத்துணர்ச்சியையும் பெரும் நம்பிக்கையையும் காண முடிந்தது. இரண்டாவது நாள் (மார்ச் 18) தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களைச் சேர்ந்த விருப்பமனு அளித்த ஏறத்தாழ 2,000 உடன்பிறப்புகளை நேருக்கு நேர் காண்கின்ற வாய்ப்பு அமைந்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை ஆகியவற்றை உள்ளடக்கிய கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை ஒவ்வொரு தொகுதிவாரியாக 9 மணி நேரத்திற்கும் மேலாகச் சந்தித்து நேர்காணலை நடத்தினேன். இடையில் சற்று நேரம் உணவு இடைவேளை என்றாலும், அந்த நேரத்திலும் தேர்தல் தொடர்பான பணிகளே நீடித்தன. மாலையில் மீண்டும் நேர்காணல் தொடர்ந்தது. 51 தொகுதிகளுக்கான நேர்காணல் நிறைவு பெற்ற இரவு 10 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருந்த உடன்பிறப்புகளின் ஆர்வமும், அவர்களிடம் காணப்பட்ட எழுச்சியும் என் களைப்பை விரட்டி, உற்சாகத்தை அளித்தது.