
புதுச்சேரி: மார்ச் 21 –
புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கடந்த ஒரு வாரமாக இழுபறியாக இருந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே நேற்று சுமுக உடன்பாடு ஏற்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்கள், பாஜக 10 இடங்கள், அதிமுக, லஜக தலா 2 இடங்களில் போட்டியிடுகின்றன.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு ஆட்சியில் உள்ளது. என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு மீது அதிருப்தி நிலவியதால், இதே கூட்டணியில் ரங்கசாமி நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சூழலில், கடந்த மாதம் காரைக்காலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ரங்கசாமி சந்தித்து, என்டிஏ கூட்டணியில் தொடர்வதை உறுதி செய்தார்.
இதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுரானா ஆகியோர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, என்டிஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 இடங்கள், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளான அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு 14 இடங்கள் என்று முடிவானது.
இந்த நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயகக் கட்சி, என்டிஏ அரசை விமர்சித்ததால், அக்கட்சியை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரம், பாஜக அமைச்சர் ஜான்குமார் அக்கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், லஜக வளர்ச்சிக்கு பாஜக உறுதுணையாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது.
இந்த அதிருப்தியால், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை ரங்கசாமி கடந்த சில நாட்களாக தவிர்த்தார். தனது அதிருப்தியை கட்சி நிர்வாகிகள் மூலம் பாஜக தலைமைக்கும் தெரியப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 19-ம் தேதி மீண்டும் புதுச்சேரிக்கு வந்தார். ஆனால், அதை புறக்கணிக்கும் விதமாக, மதுரை, திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ரங்கசாமி புறப்பட்டுச் சென்றார். இதனால், கூட்டணியின் மற்ற கட்சியினருடன் மன்சுக் மாண்டவியா பேச்சு நடத்தினார். ரங்கசாமியின் வருகைக்காக காத்திருந்தார்.
















