
சென்னை: மார்ச் 14-
முழு நேரமாக பணியாற்றுவதால் மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுப் பள்ளி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அப்போது அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஆர்.லட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 2022-23-ம் கல்வியாண்டு முதல் 2,381 முன்பருவக் கல்வி ஆசிரியர்கள் (எல்கேஜி, யுகேஜி) பணியாற்றி வருகிறோம்.
எங்கள் நியமனத்துக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதை தொடக்கக் கல்வி அதிகாரிகளே உறுதிப்படுத்தியுள்ளனர்.
தினமும் காலை 9 மணிமுதல் மதியம் 12.45 மணிவரை பணி நேரம் என்றாலும், பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாலை 4 மணிவரை முழுநேரமும் பணியாற்றுகிறோம். எங்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. சாதாரண கூலி வேலைக்குச் செல்வோர் கூட தினமும் ரூ.600 பெறுகிறார்கள். ஆனால், கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றும் எங்களின் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த ஊதியம் எங்களின் குடும்ப வாழ்வாதாரத்துக்கு போதுமானதாக இல்லை.
எனவே, எங்களின் குடும்ப நலனை கருத்தில்கொண்டு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அதோடு மே மாதமும் ஊதியமும் தர வேண்டும். மாதாந்திர ஊதியத்தை ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும்.
எங்களில் பெரும்பாலானோர் பெண் ஆசிரியர்கள். எனவே, குறைந்தபட்சம் 3 மாதகாலம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். நாங்கள் முழுநேரமாக பணியாற்றி வருவதால் எங்களை பணிநிரந்தரம் செய்ய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

















